Sunday, July 31, 2005

BPO வுக்கு ஆபத்தா?

BPO மூலம் பெரும் அன்னிய செலாவணியை ஈட்டி வரும் நாடுகளில் முதன்மையானது இந்தியா. இந்தத் தேன் நிலவு விரைவில் முடிவுக்கு வந்து விடுமா? இந்தக் கேள்வி எழ இப்போது என்ன தேவை என நீங்கள் நினைக்கலாம்.

குறைந்த பட்சம் ஆஸ்திரேலியாவிலுள்ள நிறுவனங்கள் தற்போது தனது சேவைகளை BPO மூலம் இந்தியாவுக்கு அனுப்புவதை மறுபரிசீலனை செய்ய முடிவு செய்துள்ளன.

டிலாய்ட் (Deloitte) நிறுவனம் நடத்திய ஓர் ஆய்வில் நால்வரில் ஒருவர் தமது சேவைகளை ஆஸ்திரேலியாவிற்குத் திரும்பக் கொண்டு வந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். என்ன காரணம் தெரியமா? உள்ளூரில் இருந்து இச்சேவைகளை வழங்குதல் வெற்றிகரமாகவும், சிக்கனமாகவும் இருப்பதாக அவர்கள் கருதுவது தான்.

50 விழுக்காட்டினர் அவர்கள் முன்னர் நினைத்தது போல BPO செலவு ஒன்றும் அவ்வளவாகக் குறையவில்லை என்றும் 70 விழுக்காட்டினர் தங்களுக்கு கசப்புணர்வே மிஞ்சியதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனால் புதிதாக BPO மூலம் தம் சேவைகளை இந்தியாவுக்கு அனுப்ப எண்ணிக் கொண்டிருக்கும் நிறுவனங்கள் இதனை மிகுந்த எச்சரிக்கையுடன் அணுகப் போவதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வில் பங்குபெற்றவர்களில் பாதிப்பேர் இம்மாதிரியான அணுகுமுறைகளில் மறைந்திருக்கும் செலவுகளே (Hidden Costs) அதிகம் என்று கருதுகின்றனர். 60 விழுக்காட்டினர் முதலில் தாம் எண்ணியதைவிட அதிக மேலாண்மை முயற்சிகள் தேவைப்பட்டதாகவும், 81 விழுக்காட்டினர் BPO வைப் பெறும் நிறுவனங்கள் தமது சேவைக்கான கட்டணமுறையில் வெளிப்படையாக இல்லாமல் அதிக செலவுகளுக்கு வழிவகுப்பதாகவும் கருதினர்.

மொத்தத்தில் டிலாய்ட் நிறுவனம் BPO முறையை செலவு குறைக்கும் முயற்சியாக அல்லாது ஒரு வணிக உத்தியாகப் பயன்படுத்துமாறு பரிந்துரைக்கிறார்கள்.

இந்த செய்திக்கான சுட்டி

http://in.tech.yahoo.com/050730/139/5zje4.html

வலைப் பதிய இன்னொரு காரணம் - ET

உங்களிடம் நீங்கள் எதற்காக வலைப் பதிகிறீர்கள் என்று கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்? சிலர் தமது ஆன்லைன் டயரி என்பர், சிலர் சமூகப் பிரச்சனைகளைச் சாடுகிறேன் என்பர். இதுபோல பல காரணங்கள் இருக்கலாம். இப்போது இன்னொரு காரணமும் சொல்லலாம். என்ன அது?

"நான் இந்தப் பூமி தவிர பிற கோள்களில் வசிப்போர் (ஏலியன்கள்) உடன் தொடர்பு கொள்ள விரும்புகிறேன்". சிரிக்காதீர்கள். அமெரிக்கா ஃபுளோரிடாவில் உள்ள மைண்ட்காமெட் (MindComet) என்கிற நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களின் வலைப் பதிவை பேரண்ட வெளிக்கு அனுப்ப முன்வந்துள்ளது. இந்த செய்தியை இந்நிறுவன முதன்மை அலுவலர் டெட் மர்ஃபி (Ted Murphy) தெரிவித்துள்ளார்.

தற்போதைக்கு இது இலவச சேவையாக இருக்கும். மனிதர்களைப் போன்ற அறிவுக்கூர்மை வாய்ந்த இன்னொரு இனம் எங்கோ இப்பேரண்ட வெளியில் இருக்கும், அந்த இனம் இந்த வலைப் பதிவுகளைக் கண்டிப்பாகப் படிக்கும் என தாம் உறுதியுடன் நம்புவதாக டெட் கூறியுள்ளார்.

செய்திக்கு சுட்டுக

http://tlc.discovery.com/news/afp/20050725/etblog.html

மைண்ட்காமெட்டின் ப்ளாக்-இன்-ஸ்பேஸ் சேவையைப் பற்றி மேலும் அறிய சுட்டுக

http://bloginspace.com/

என்ன நீங்களும் ஏலியன்களுடன் தொடர்பு கொள்ள தயாராகி விட்டீர்களா? என்ன ஏலியன்களுக்குத் தமிழ் தெரியுமா என்று தெரியவில்லை..

Wednesday, July 27, 2005

இது நல்லதுக்கா?

சில நாட்களுக்கு முன் மைக்ரோசாஃப்ட் க்ளாரியா என்கிற உளவுமென்பொருள் தயாரிப்பு நிறுவனத்தை வாங்கியது. பலருக்கு அது அவ்வளவு நல்ல செய்தியாகத் தெரியவில்லை. இந்த சூடு ஆறும் முன்னேயே இன்னொரு திடுக் செய்தி வெளியாகி உள்ளது. தொடர்ந்து படியுங்கள்.

தத்தம் துறைகளில் பெரியண்ணன்களான மைக்ரோசாஃப்ட் மற்றும் சாப் (SAP) இருவரும் இணைந்து புதிய (?) ஒரு மென்பொருளைத் தயாரிக்கப் போகிறார்களாம். இதற்கு "மெண்டொசினோ" (Mendocino) என்று பெயரிட்டுள்ளார்கள். மைக்ரோசாஃப்டின் புகழ்பெற்ற மென்பொருட்களான ஆஃபிஸ், ஔட்லுக் இவற்றை, சாப்பின் வணிகத் திட்டமிடல் மென்பொருளோடு இணைத்து வெளியிட உள்ளார்கள். இதனால், பயனர்களுக்கு இரு மென்பொருள்களிலும் இருமுறை தகவல் உள்ளிடும் இரட்டிப்பு வேலை மிச்சமாவதால் பண மற்றும் நேர விரையம் குறைக்கப் படுமாம்.

இவ்விரு நிறுவனங்களும் இணைவதற்கான சாத்தியக் கூறுகளையும் ஆராய்ந்து இப்போதைக்கு அது சரிப்பட்டு வராது என்று இணைவதற்கு பதில் ஒருமித்து செயல்பட ஒத்துக்கொண்டுள்ளார்கள்.

இச்செய்தி பிற பெரிய நிறுவனங்களான ஐ பி எம், ஆரக்கிள் (தெய்வவாக்கு?) இவற்றின் வயிற்றில் நிச்சயம் புளியைக் கரைக்கும் என்று கார்ட்னரைச் சேர்ந்த ஒரு நிபுணர் கூறி இருக்கிறார்.

லோட்டஸ் நோட்ஸ், டிவலி இன்னும் விரல்விட்டு எண்ணிவிடக் கூடிய சில மென்பொருள்களை மட்டும் தன்னிடம் வைத்திருக்கும் ஐ பி எம்முக்கும் தன்னுடைய இ-பிசினஸ் சுயிட்டையும் க்ரிட் கம்ப்யூட்டிங்கையும் மட்டும் நம்பி இருக்கும் ஆரக்கிளுக்கும் இந்த செய்தி கவலையளிப்பதாகவே இருக்கும். இவை இரண்டும் துரிதமாக இதற்கு மாற்றாக ஏதேனும் செய்யாவிட்டால் இவற்றின் சந்தைப் பங்குக்குப் பங்கம் நிச்சயம் வரும்..

சாப், மைக்ரோசாஃப்ட் இருவரும் தத்தம் தயாரிப்புகளை பரஸ்பரம் இடத்திற்கேற்றாற்போல விற்பனை செய்து கொள்ளவும் ஒத்துக் கொண்டுள்ளனவாம்.

இந்தப் புதிய மெண்டொசினோ 2006ல் விற்பனைக்கு வரும் என இந்நிறுவனங்கள் கூறியுள்ளன. இது நல்லதுக்கா? .. காலம் தான் பதில் சொல்லும்..

குழந்தைகள் பாடல் - காட்டுப்பாக்கம் தாத்தா

இப்போதெல்லாம் பல வலைப் பதிவுகளில் குழந்தைகள் கதை, பாடல்கள் வண்ண விளையாட்டு என்று களை கட்டி வ்ருவதால், நானும் என் பங்குக்கு சிறு வயதில் கற்ற ஆனால் இன்னும் மறக்காத பாடல் ஒன்றை சிறியவர், பெரியவர் மற்றும் (வளர்ந்த) குழந்தைகளுக்காகப் பதிகிறேன்.

காட்டுப் பாக்கம் தாத்தாவுக்கு
காடு போலத் தாடியாம்
மாடி மேலே நிற்கும் போதும்
தாடி மண்ணில் புரளுமாம்

ஆந்தை இரண்டு, கோழி, மைனா
அண்டங்காக்கை குருவிகள்
பாந்தமாகத் தாடிக்குள்ளே
பதுங்கிக் கொண்டிருந்தன

உச்சி மீது நின்ற தாத்தா
உடல் குலுங்கத் தும்மினார்
அச்சு அச்சு என்ற போது
அவை அனைத்தும் பறந்தன.

இப்பாடலை இயற்றியவர் கவிஞர் அழ.வள்ளியப்பா என்று நினைக்கிறேன். காப்புரிமைச் சிக்கல்கள் ஏதேனும் இருந்தால் அன்பர்கள் பின்னூட்டங்களில் சுட்டிக் காட்டுங்கள். பதிவைத் தூக்கிவிடுகிறேன்..... நன்றி.....

Monday, July 18, 2005

மூளைக்கு வேலை

சரி.. வலைப்பூ ஒன்றை ஆரம்பித்தாகிவிட்டது... ஓரிரண்டு பதிவுகளையும் போட்டாகிவிட்டது.. அதில் சில நல்ல உள்ளங்களின் பார்வையும் விழுந்தாகி விட்டது.. (டேய் ஐஸ் வைக்காதே... என்னன்னு சொல்லு சீக்கிரம்..)

சரி சரி.. விஷயத்திற்கு வருகிறேன்... ஒரு சின்ன கணக்கு கல்லூரியில் படிக்கும் போது நண்பர்களிடம் கூறி விளையாடியது..

கணக்கு இது தான். மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அலுவலர் ஒருவர் ஒரு வீட்டின் அழைப்பு மணியை அழுத்திக் காத்திருக்கிறார். அந்த வீட்டில் இருக்கும் ஒரு பெண்மணி வெளியே வந்து என்ன என்று பார்க்கிறார். அலுவலர் தான் வந்த நோக்கத்தைக் கூறி வீட்டில் இருக்கும் நபர்களின் விபரங்களைக் கேட்கிறார். அந்தப் பெண்மணி தன்னுடைய வீட்டிலுள்ளோர் விபரங்களைக் கூறுகிறார். அவர் கூறியது இது தான். என் மூன்று மகள்களின் வயதின் பெருக்குத் தொகை 36 அவர்களின் வயதின் கூட்டுத் தொகை வேண்டுமானால் பக்கத்து வீட்டு கதவிலக்கத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு வீட்டினுள் சென்றுவிட்டார். அந்த அலுவலர் பக்கத்து வீட்டுக் கதவிலக்கத்தைப் பார்த்துவிட்டு மீண்டும் அழைப்பு மணியை அழுத்த நினைக்கும் போது உள்ளிருந்து அந்தப் பெண்மணி தன் மகள்களிடம் பேசுவது அவ்வலுவலரின் காதில் விழுகிறது. கணக்கெடுப்பு அலுவலரோ அழைப்பு மணியை அழுத்தாமல் புன்னகைத்துக் கொண்டே தன்னுடைய ஏட்டில் வயது விபரங்களை எழுதியபடி சென்று விடுகிறார். அந்தப் பெண்மணி அப்படி என்ன கூறினார்? கேள்வி அதுவன்று.. சற்றுப் பொறுங்கள்.. அவர் கூறியது இதுதான்... "அக்கா மாடியில் தூங்குகிறாள். சத்தம் போடாமல் விளையாடுங்கள்"....

சரி இப்போது கேள்விக்கு வருகிறேன்.. அவரது மகள்களின் வயது என்ன? அப்பாடா ஒருவழியாக கணக்கைச் சொல்லி விட்டேன்.. உங்கள் விடைகளைப் பின்னூட்டமிடுங்கள்.. சரியான விடை சொன்னவருக்கு ஒரு சபாஷ் போடுகிறேன்.. அவரது பதிவில் ஒரு + குத்து விடுகிறேன்..

Sunday, July 10, 2005

தாயின் தியாகமா? விளம்பர உத்தியா?

வர வர எப்படித்தான் விளம்பரங்கள் செய்வது என்று ஒரு வரை முறை இல்லாமல் போய் விட்டது. நான் இங்கே குறிப்பிட விரும்புவது விளம்பர உள்ளடக்கங்களை அன்று. அவை செய்யப்படும் ஊடகங்கள் பற்றி.

அமெரிக்காவில் ஒரு தாய் தனது மகனின் படிப்புச் செலவுக்காக தன்னுடைய நெற்றிப் பரப்பை பத்தாயிரம் டாலருக்கு ஒரு சூதாட்ட விடுதி விளம்பரம் செய்யப் பயன்படுத்த 'விற்றுள்ளார்'. ஆம் ஆச்சரியப் படாதீர்கள்.

கரோலின் ஸ்மித் என்கிற 30 வயது தாய் தன்னுடைய மகனின் படிப்புச் செலவிற்காக என்ன செய்வது என்று சிந்தித்த போது அவருக்கு இந்தத் திட்டம் உதித்தது. இதனைப் பற்றி அவர் குறிப்பிடுகையில் இது ஒரு முட்டாள் தனமாகப் பலருக்குத் தோன்றலாம். ஆனால் எனக்கு இந்தப் பத்தாயிரம் டாலர் ஒரு மில்லியன் டாலருக்கு சமம். வாழ்வதோ ஒரு முறை. இந்த வாழ்வை என் மகனுடைய சிறப்பான எதிர்காலத்திற்காகக் கழிக்க விரும்புகிறேன். என் மகனின் படிப்புச் செலவிற்கு இந்தத் தொகையைப் பயன் படுத்திக் கொள்வேன்.

என்னுடைய இந்த முடிவு சாதாரணமாக எடுத்ததன்று. பல நாள் என் தோழருடன் கலந்தாலோசித்து எடுத்தது இம்முடிவு.

கரோலினின் நெற்றிப் பரப்பை "வாங்கி"யுள்ள கோல்டன் பேலஸ் என்கிற சூதாட்ட நிறுவனம் இது போன்ற வித்தியாசமான விளம்பர உத்திகளுக்கு பெயர் போனதாம். இனி வரும் காலங்களில் எல்லோரையும் போல விளம்பரம் செய்வது பல பேரைச் சென்றடையாது எனவே நாங்கள் இவ்வாறு ஏதாவது வித்தியாசமாக (?) செய்கிறோம் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

கரோலின் கேட்ட பத்தாயிரத்துடன் மேலும் ஒரு ஐயாயிரம் டாலர்களை அளிக்க முன்வந்துள்ளதாம் அந்நிறுவனம்.

மேலும் விபரங்கள் அறிய சுட்டுக

http://tlc.discovery.com/news/afp/20050704/mother.html

கரோலினின் தாயன்பை நினைத்துப் பூரிப்பதா அல்லது கோல்டன் பேலஸின் விளம்பரத் தந்திரத்தை எண்ணி வியப்பதா? ஒன்றும் தோன்றவில்லை எனக்கு.. உங்களுக்கு என்ன தோன்றுகிறது எனப் பின்னூட்டுங்கள் அன்பர்களே.

Monday, July 04, 2005

மூன்றாவது பதிவு

ஹி.. ஹி.. இது சும்மா தமிழ்மணத்துக்குள்ளாற வாரதுக்கு... அதான் நம்ம தமிழ்மணத்தார் மூணு பதிவு எழுதுனாத் தான் உள்ள வர முடியும் இல்லன்னா அப்படி ஓரமா நின்னு வேடிக்கை பாருன்னு சொல்லிப்புட்டாகள்ள...

இனிமேல் ஒழுங்கா நல்ல பிள்ளையா பல கோணங்களில் பதிவுகள் போடுவேன்னு இப்போ சொல்லிக்கிறேன்...

நன்றி...

Sunday, July 03, 2005

முதல் பதிவு

இது என்னுடைய முதல் பதிவு. தமிழ்மணத்தில் முதலில் அனானிமசாகவும் பின்னர் ஒரு ப்ளாக்கர் கடவுச்சொல்லுடனும் இதுவரை ஓர் ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தவன் இன்று இதோ வலைப்பதிவுகளில் குதித்தே விட்டேன்.

வரவேற்பா அல்லது தர்ம அடிகளா? நீங்கள் முடிவு செய்யுங்கள் அன்பர்களே!

This page is powered by Blogger. Isn't yours?



Free Hit Counter