Monday, February 20, 2006

நன்றிகள் பல...!



இன்றைய தினமலர் நாளிதழிலும் தேன்கூட்டிலும் என்னுடைய இந்த வலைப் பதிவு குறிப்பிடப் பட்டுள்ளது. இதனால் என் வலைப் பதிவிற்கு வரும் விருந்தினர் எண்ணிக்கை அதிகரித்தும் உள்ளது.


தினமலர் நாளிதழுக்கும் தேன்கூடு நிர்வாகிகளுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதனை முதலில் எனக்குத் தெரியப் படுத்திய திரு. மாயவரத்தான் அவர்களுக்கும், திரு. நாமக்கல் சிபி அவர்களுக்கும் முதற்கண் நன்றி.. தொடர்ந்து தனிமடலிலும் வாழ்த்துகளைத் தெரிவித்த அன்பு உள்ளங்களுக்கும் நன்றி..

தொடர்ந்து ஆதரவு தர வேண்டுமாய் வேண்டுகோளுடன்.....

Thursday, February 09, 2006

சாளரத்தின் கடவுச்சொல் மறந்தால்...?

தலைப்பைப் பார்த்த மாத்திரத்தில் கவிதை, பின் நவீனத் துவம் என்று ஓடி வந்திருந்தால் மன்னிக்கவும். இந்த இடுகை சாளரம் னுப (அதாம்பா விண்டோஸ் xp,.. நற நற.. இத முதல்லேயே தெளிவா சொல்லிருக்கலாம்ல..) எனும் இயங்கு தளத்தின் சகல உரிமைகளும் கொண்ட பயனரான நிர்வாகி (Administrator) கடவுச்சொல் மறந்துவிட்டால் என்ன செய்வது என்பது குறித்தது.

இப்போதெல்லாம் பாதுகாப்புக் கொள்கை (Security policy) என்கிற பெயரில் மூன்று அல்லது நான்கு முறை சரியாக கடவுச்சொல் அளிக்கவிட்டால் பல நிறுவனக் கணினிகளில் பூட்டு விழும் (Account lockout) தலைவலியும் இருப்பதால் இது சற்றுக் கடினமான காரியம் தான்.

இதற்குச் சில வழிகள் உள்ளன. முதலாவது மிகச்சுலபம். வேறு ஒன்றுமில்லை திரும்பத் திரும்ப யோசித்து கடவுச்சொல் நினைவுக்கு வருகிறதா எனப் பார்ப்பது

இரண்டாவது அந்தக் கணினியில் நிர்வாகிக்கு நிகரான பயனர் கணக்கு இருந்தால் அதன் மூலம் உட்புகுந்து இச்சிக்கலைச் சரி செய்யலாம்.

மூன்றாவது முற்றிலும் அழித்துப் புதிதாக இயங்கு தளத்தை நிறுவுவது (அட அது தான் எல்லாருக்கும் தெரியுமே)

நான்காவது மிகக்குறைவாகவே அறியப் பட்டுள்ள வழிமுறையாகும். ஆனால் இம்முறைக்கு உங்களிடம் தரவுத்தள நிறுவிக் குறுந்தகடும், சாவியும் (Key) வேண்டும்.

குறுந்தகட்டை கணினியின் வட்டு இயக்கியில் (CD-ROM Drive) இட்டு கணினியைத் தொடக்கவும். கணினி குறுந்தகட்டில் உள்ள நிறுவியைத் (Installer) தொடக்கும். வரவேற்புத் திரை (Welcome Screen) வந்தவுடன் Enter சாவியை அழுத்தி அடுத்துவரும் உரிம ஒப்பந்தத்தை (எத்தனை பேர் முழுவதும் படிக்கிறீர்கள்?) ஏற்றுக் கொள்ளுங்கள்.

தற்போது நிறுவி உங்களுக்கு புதிதாக நிறுவு (Install) மற்றும் சரிசெய் (Repair) என்கிற தெரிவுகளை அளிக்கும். R எனும் சாவியை அழுத்தி சரிசெய் முறையைத் தொடங்குங்கள். சரிசெய்யும் நிலை முடிந்ததும் தங்களின் கணினியை மீள்தொடக்கம் செய்யவும்.

குறுந்தகட்டை இப்போது வட்டு இயக்கியில் இருந்து வெளியில் எடுத்துவிடவும். மீண்டும் தொடங்கும் நிறுவி சரிசெய் செயலியைத் தொடரும். திரையின் இடது கீழ் மூலையில் Installing Devices என்கிற பட்டியைக் காணும் பொழுது Shift-F10 சாவித் தொகுப்பை அழுத்துங்கள். தற்போது கட்டளைக்காட்டி (Command Prompt) திரையில் தோன்றும்.

அதில் NTUSRMGR.CPL என்று தட்டச்சி, Enter சாவியை அழுத்துங்கள். தற்போது பயனர் கணக்கு பயன்பாட்டுச் செயலிக்குட்டி (User Accounts Applet) திரையில் தோன்றும். இப்போது நீங்கள் நிர்வாகிப் பயனர் கணக்கைத் தேர்ந்தெடுத்து அதன் கடவுச்சொல்லை மாற்றவோ அல்லது நீக்கவோ இயலும். வேலை முடிந்ததும் செயலிக்குட்டியை மூடி கட்டளைக்காட்டியிலிருந்தும் வெளியேறவும்.

சரிசெய்யும் வேலை (Repair process) முடியும் வரைக் காத்திருந்துப் பின்னர் கணினியை மீள்தொடக்கம் செய்யவும். புதிய கடவுச்சொல்லுடன் தற்போது நீங்கள் உள் நுழையலாம்

கொசுறு: கடவுச்சொல் மறக்காமலிருக்க ஏதேனும் வழி உள்ளதா? இல்லாமலா? உங்களுக்குத் தெரிந்த உபாயங்களைப் பின்னூட்டுங்கள்.. எனக்குத் தெரிந்ததைப் பின்னர் சொல்கிறேன்.

This page is powered by Blogger. Isn't yours?



Free Hit Counter