Wednesday, May 03, 2006

நன்னான்கு அல்லது நவ்வாலு!

நண்பர் கவிஞர் இப்னு ஹம்துன் அப்படி என்ன என்னுடைய இவ்வலைப்பதிவில் கண்டாரோ தெரியவில்லை, சும்மா இருந்த என்னை 'நாலு' விளையாட்டிற்கு அழைத்து இழுத்து விட்டு விட்டார்.

சரி சொல்லுவதற்கு (உருப்படியாய்) நான்கு செய்திகள் இல்லை என்றாலும் எனக்குப் பிடித்த நான்கு வானூர்தித் தளங்களைக் குறிப்பிடலாம் என உள்ளேன்.

1. காய் டெக் (Kai Tek), ஹாங்காங்:

மிகவும் சிக்கலான தரையிறங்கும் முறை கொண்ட தற்போது மூடப்பட்டுவிட்ட ஒரு விமானத்தளம். விமானி வானூர்தியைத் தரையிறங்க இறுதித் தரைதொடலுக்கு (Final approach) ஆயத்தமாக 30 வினாடிகளே அவகாசம் உள்ளதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். இன்றும் விமானிகளின் CPL உரிமப் புதுப்பிப்புத் தேர்வில் காய் டெக் மாதிரி (Simulation) இடம்பெறுகிறது என்றும் கேள்விப்பட்டுள்ளேன். இது தற்போது மூடப்பட்டு விட்டதால், புதிய விமானத்தளம் தற்போது செக் லப் காக் (Chek Lap Kok) எனும் இடத்தில் இயங்கி வருகிறது. கத்தாய் பசிபிக் வானூர்திச்சேவை நிறுவனத்தின் தாயகத் தளமாகவும் இது உள்ளது.









2. சாங்கி (Changi), சிங்கப்பூர்

சிங்கப்பூர் சென்று வந்தவர்கள் அல்லது சிங்கப்பூரில் பணி புரிபவர்கள் சாங்கி வானூர்தித்தளம் குறித்து ஒருமுறையேனும் வியக்காமல் இருக்க இயலாது. முனையங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு இங்கு உபயோகப் படுத்தப்படும் ஸ்கைட்ரைன் முதலில் இங்கு தான் பார்த்தேன். சிங்கப்பூர் வானூர்திச்சேவை நிறுவனத்தின் தாயகத் தளம் இது.











3. ஷிபோல் (Schiphol), ஆம்ஸ்டர்டாம்

ஐரோப்பாவிலிருக்கும் மிகப்பெரிய வானூர்தித்தளங்களுள் ஒன்று. ஷிபோல் என்பது ஒரு தனி சிறு நகரமாக உருவெடுத்துள்ளது. கிட்டத்தட்ட ஏழு ஓடுபாதைகளைக் (இன்னும் மூன்று கட்டிக் கொண்டிருப்பதாகக் கேள்வி!) கொண்டுள்ளது. வான்குழு (Skyteam) எனப்படும் வானூர்திச்சேவை ஒத்துழைப்புக் குழுமத்தின் முக்கிய உறுப்பினரான கேஎல்எம் (KLM) வானூர்திச்சேவை நிறுவனத்தின் தாயகத் தளம் இது. ஆம்ஸ்டர்டாம் நகரத்துடன் மிக வசதியான சாலை மற்றும் இருப்புப்பாதை இணைப்பு கொண்டுள்ளது. நகரத்திற்கு செல்ல வானூர்தித் தளத்தின் சுரங்கப் பாதைக்குச் சென்று நெதர்லாந்து ரயில் போக்குவரத்து நிறுவனத்தின் தொடர்வண்டிகள் மூலம் 15 நிமிடங்களுக்குள் நகர மையத்தை அடையலாம்.











4. துபை (Dubai), துபை.

அரபு அமீரக ஒன்றியத்திலிருக்கும் இவ்வான்தளத்தை அறியாதவர் மிகச் சிலரே. துபை ஒரு மிக முக்கிய சுற்றுலா நகரமாக மாறி வருகிறது.

இந்நகரில் ஆண்டு முழுவதும் ஏதாவது ஒரு விழா நடந்து கொண்டுதான் இருக்கிறது. எமிரேட்ஸ் எனப்படும் துபைக்குச் சொந்தமான வானூர்திச் சேவை நிறுவனத்தின் தாயகத் தளம் இது. தற்போது உலகக் கால்பந்துக் கோப்பைக்கான அதிகாரப்பூர்வ வானூர்திச் சேவை எனும் படிநிலை (Status) கிடைத்துள்ளதால், துபை மேலும் அதிக வானூர்திச் சேவைகளைக் காணும்.

முதலில் தமிழ்நாட்டிலிருக்கும், சென்னை, கோவை, மதுரை, திருச்சி வானூர்தித்தளங்களைப் பற்றித் தான் எழுதத் தொடங்கினேன். இருப்பினும் அவற்றைப் பற்றி நம்மில் பலருக்குத் தெரிந்திருப்பதால் இப்படி வேறு கோணத்தில் நான்கு வானூர்தித் தளங்களைத் தேர்ந்தெடுத்து எழுதியுள்ளேன். தூத்துக்குடியில் கூட ஒன்று இருப்பதாக அறிகிறேன்.

Comments:
நன்றி!
வித்தியாசமான பதிவாகத் தருவீர்களென்று தெரியும். சுருக்கமான பதிவாகவும் தந்தது ஏமாற்றமே! மேலும் சில 'நான்கு'களைத் தந்திருக்கலாம்.

அப்புறம், கேட்க வேண்டுமென்று நினைத்தேன், எங்கிருந்து பிடிக்கிறீர்கள் இந்த 'அறிவியல் கலைச் சொற்களை'?
 
வாங்கய்யா இப்னு ஹம்துன்,

நாலு சமாச்சாரத்துல மாட்டி விட்டதும் இல்லாம, அப்டி என்னத்தய்யா எதிர்பாக்குறீங்க.. நாந்தான் மொதல்லேயே சொல்லிட்டேனே..

இன்னொரு விஷயம், இந்த இடுகைக்கு நல்ல படம் நாலு இருந்தாலும், நமக்குப் படங்காட்ட ஒத்து வரலை.. முயற்சித்துப் பாக்குறேன்.

வந்ததுக்கும் கருத்து சொன்னதுக்கும் ரொம்ப நன்றி ..
 
நம்ம மும்பையும் தில்லியும் இவை போல விரைவில் ஆகுமா ? பலத்த எதிர்ப்புக்களிடையே தனியார்மயமாக்கப் பட்டிருக்கும் இவற்றின் வெற்றியே வருங்கால கொள்கைகளுக்கு வழி வகுக்கும்.
 
வாருங்கள் மணியன்,

மும்பை, தில்லி, சென்னை விமானத் தளங்களைப் பார்க்கும் போது இப்படி ஓர் ஏக்கம் மனதில் தோன்றுவது உண்மை தான். நீங்கள் சொன்னது போல் தனியார் மயப் படுத்தியதால் இவற்றின் சேவையில் நல்ல மாற்றம் வரும் என நம்புவோம். இந்திய விமானநிலையக் குழுமம் நிர்வகிக்கும் விமான நிலையங்களில் பெரும்பாலானவற்றில் கழிவறை போன்ற அடிப்படை வசதிகூட இல்லை. ஆனால், விமான நிலையங்களைப் பயன் படுத்தும் ஒவ்வொரு பயணியிடம் இருந்தும் குறைந்தது 500 ரூபாய் வசூலிக்கிறார்கள். இது எதற்குப் பயன் படுகிறது என்பது சம்பந்தப் பட்ட துறை அதிகாரிகளுக்கே வெளிச்சம்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
 
இதனால் அனைவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால், போராடி (?) படங்களை இணைத்து விட்டேன் என்பதே!
 
அடேடே ஜுடுவா சாரா

வாங்க சார்.. நக்கல் எல்லாம் இருக்கட்டும், நான் தமிழில் தானே எழுதியிருக்கிறேன்.

என்னானு தெளிவா சொன்னா புரியும் ஐயா!
 
Post a Comment

<< Home

This page is powered by Blogger. Isn't yours?



Free Hit Counter