Thursday, December 29, 2005

குறிப்பில் ஊக விளையாட்டு (KlueLess)

இந்தோரிலிருக்கும் இந்திய மேலாண்மைக் கழக விழாக் கொண்டாட்டங்களுக்காக உருவாக்கப் பட்ட இந்த விளையாட்டு மோகன்தாசு, தேசிகன், சுரேஷ் மற்றும் இன்னபிற வலைப் பதிவர்களால் முடிக்கப் பட்டதாக குறிப்பிடப் பட்டது. கடந்த இரு நாட்களாகப் போராடி (?) ஒரு வழியாக முடித்து விட்டேன். கடைசிப்பக்கம் வேறு மாதிரியாக இருந்தது. இதனைப் போலவே வேறொருவர் திரு. தேசிகனின் பதிவில் கேள்வி எழுப்பி இருந்தார், எனவே எனக்குக் கிடைத்த பக்கம் தான் தற்போதைக்குக் கடைசியானது என்பதும் இந்த விளையாட்டிற்கு நினைவுப் பரிசுகள் அளிப்பது முடிவுற்றது என்பதும் உறுதியாகி விட்டது. உங்களில் எத்தனை பேர் முடித்து விட்டீர்கள்?

பி.கு:
1.இவ்விளையாட்டிற்கு வழக்கத்தை விட்டு சற்றே மாற்றாக சிந்திக்க வேண்டும்.
2. எல்லாருக்கும் எல்லாமும் தெரிந்திருக்கும் வாய்ப்புகள் குறைவே என்பதால் நண்பர்களின் உதவியும் அவசியம்.
3. இவ்விளையாட்டு விருப்பமில்லாதோருக்கு ஒரு வெட்டி வேலையாகத் தோன்றலாம்.

Wednesday, December 14, 2005

தன் நலன் அறியும் ஊர்திகள்

தானியங்கி ஊர்திகள் தொழில் நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இதில் தற்போது உருவாக்கப் பட்டுள்ள மாதிரி (Prototype) ஒன்றில் ஏதாவது ஒரு பாகம் பழுதடைந்துள்ளதா எனத் தானே சோதித்து அறியும் தொழில் நுட்பமும், அதோடு பழுதான பாகம் எவ்வளவு தூரம் அல்லது நேரம் தாங்கும் என்பதையும் அறிய இயலும்.

ஆர்லண்டோவிலுள்ள பன்னாட்டு எந்திரப் பொறியியற் குழுமம் மற்றும் காட்சியகத்தைச் சேர்ந்த டக்ளஸ் ஆடம்ஸ் மற்றும் முஹம்மது ஹாரூன் எனும் இரு பொறியாளர்கள் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரையில் இத் தொழில்நுட்பத்தை அலசியுள்ளனர். "ஊர்திகளில் உள்ள எரிபொருள் காட்டிகளைப் போலவே ஊர்திகளிலுள்ள பிற பாகங்களின் நலனை அறிதல் தகுந்த உணர்வி மற்றும் காட்டிகளின் மூலம் சாத்தியமே" என்று கூறுகின்றனர்.

சில ஊர்திகளில் இவ்வகை உணர்விகளையும் காட்டிகளையும் அமைத்து அவற்றின் சில வன் திருகுகள் (nuts and bolts) சிலவற்றை சரியாக முதலில் பொருத்தியும் பின்னர் அவற்றை சரியாகப் பொருத்தாமலும் உண்டாகும் அதிர்வுகளை ஒரு செயலி (software program) கொண்டு அலசுவதின் மூலம் குறைபாடுகளைக் கண்காணிக்க இயலும் என நிரூபித்துள்ளனர்.

இவ்வதிர்வுகள் இதயத் துடிப்புகளைப் போல ஊர்திகளின் நலனைக் காட்டின என்று இவர்கள் கூறியுள்ளனர்.

இத் தொழில்நுட்பத்தைக் குறித்து அமெரிக்க இராணுவ ஊர்தி ஆய்வு மற்றும் வளர்ச்சி மையத்தைச் சேர்ந்த பால் டெக்கர் என்பவர் கூறும் போது, இது இராணுவ ஊர்திகளுக்கு அவற்றின் நலனை முன்கூட்டி அறியும் விதத்தில் மிகுந்த பயன் தரக் கூடியதாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

இச்செய்தி சேகரிக்கப் பட்ட தளத்திற்கான சுட்டி

http://dsc.discovery.com/news/briefs/20051128/selfcar_tec.html

இந்த நவீன தொழில்நுட்பம் வணிக அளவில் வெற்றி பெறுமா? போயிங் 747 பெரு வானூர்தி அமெரிக்க இராணுவத்திற்காகத் தயாரிக்கப் பட்ட ஒரு தோல்வியடைந்த திட்டப் பணி (Project) என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? பின்னர் அதனை போயிங் வணிக அளவில் பெரு வெற்றியாக மாற்றியது என்பது நான் கூறவேண்டியதில்லை..

This page is powered by Blogger. Isn't yours?



Free Hit Counter