Friday, April 14, 2006

மின்மடல் வைரஸ்களைக் கண்டறிய / தடுக்க...

ப்போதெல்லாம் மின்மடலில் ஸ்பேம்கள் வந்துசேராத மின்முகவரிகளே இல்லை எனலாம். (என்னிடம் இருக்கும் ஒரு முகவரிக்கு இன்று வரை இதுவரை இவ்வகை மடல்கள் வந்ததில்லை. அம்முகவரியை இங்கே இட்டால் அதோடு இந்தப் பெருமை பணால் ஆகிவிடும் என்பதால் இடவில்லை).

இவ்வகையான ஸ்பேம்களை பொதுவாக இருவகைப் படுத்தலாம். பெருந்தீங்கு விளைவிப்பன மற்றும் சிறு தீங்கு விளைவிப்பன என்று.

(உங்கள் கணினியின் கோப்புகளை அழித்தல், திருடுதல் போன்ற வேலை செய்யும்) வைரஸ்கள், புழுக்கள், ஃபிஷிங் (தமிழில் இதற்கு என்ன சொல்லலாம்?) இன்னும் இதே போன்ற இன்ன பிற போன்றவை பெருந்தீங்கு விளைவிக்கும் ஸ்பேம்கள் என்றும் உங்கள் கணினியில் செயல் திறனைக் குறைத்து, கணினி இணைப்புகளில் தேவையற்ற செய்திகளை அனுப்பி மொத்த கணினித் தொகுப்பின் வேகத்தைக் குறைக்கும் வேலை செய்வனவற்றைச் சிறு தீங்கு விளைவிப்பன என்றும் நான் குறிப்பிடுகிறேன். இவ்வகையில் எரிச்சலை ஏற்படுத்தும் இலவச பட்டங்கள், பட்டயங்கள், இன்னும் எழுத முடியாத பல அனைத்தையும் உள்ளடக்கி வரும் விளம்பரங்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.

இவற்றைக் கண்டறிந்து இவற்றின் தாக்குதல்கள், தீய பின் விளைவுகளிலிருந்து தற்காத்துக் கொள்ள சில எளிய வழிமுறைகள் உள்ளன. அவற்றை இவ்விடுகையில் கூற முயற்சிக்கிறேன்.

1. கண்டறிதல்:

ஆணைச் சாளரத்தின் மூலம் இயக்கவல்ல எந்த ஒரு கோப்புக்கும் பெரிய 'தடா' போட்டுவிடுங்கள். இவ்வகைக் கோப்புகளை இவற்றின் நீட்சியின் மூலம் கண்டறியலாம். இவை exe, pif, bat, com இன்னும் பல.

2. நோக்கம்:

எந்த ஒரு மின்மடல் இணைப்பையும் அதன் நோக்கம் அறிந்து திறப்பதை வழக்கமாகக் கொள்ளுங்கள். அனுப்புநர் நீங்கள் மிகவும் அறிந்த நபராக இருந்தாலும் சரியே. ஒருவேளை அனுப்புநரின் கணினி இவ்வகை வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கக் கூடும்.

3. தேவை:

எந்த ஒரு இணைப்பும் உங்களுக்குத் தேவை இல்லை என்றால் திறக்க வேண்டாம். இருக்கவே இருக்கிறது 'அழி' பொத்தான்.

4. தற்காப்பு:

என் நண்பர் ஒருவர் நகைச்சுவையாகச் சொல்லுவார். 'உலகின் மாபெரும் சொத்தை மென்பொருளால் ஒருவர் பணக்காரராக முடியும் என்றால் அவர் பில் கேட்ஸ் தான்' என்று. இதில் எந்த அளவு உண்மை உள்ளது என்கிற விவாதத்திற்குள் நான் செல்ல விரும்பவில்லை. நாம் விரும்பியோ விரும்பாமலோ சாளரம் (Windows) மென்பொருள் ஆயிரக்கணக்கான ஓட்டைகளுடன் (vulnerabilities) உள்ளது. அவற்றை அவ்வப்போது அடைக்க நுண்மென்மை (Microsoft) பல சாந்துக் கலவைகளை (patches) நமக்குத் தந்து கொண்டிருக்கிறது. அவற்றின் மூலம் முடிந்த வரை ஓட்டைகளை அடைத்து வைத்திருப்பது நல்லது தானே. நீங்கள் வெளிநோக்கு (Outlook) வைத்திருந்தால் உங்களுக்கு இந்த வேலை மிக இன்றியமையாதது ஆகும்.

நீங்கள் யூடோரா பயனாளர் என்றாலும், வலைவெளி மடல் (Netscape Mail) பயனாளர் என்றாலும், பறக்கும் குதிரை (Pegasus) பயனாளர் என்றாலும் இந்த சாந்து பூசும் (வேலையத்த!) வேலை இன்றியமையாதது.

இந்த எளிய முறைகளைப் பின்பற்றி மகிழ்வுடன் பாதுகாப்பாக மின்மடல் படியுங்கள்.

பி.கு: சாளரம் மட்டுமே ஏதோ பெரும் ஓட்டைகளுடன் இருப்பது போலவும், அதற்குச் சவால் விடும் லினக்ஸ் ஏதோ கனவுலக இயங்கு தளம் போலவும் பல அன்பர்கள் மாயையில் இருக்கிறார்கள். அதில் ஓரளவு மட்டுமே உண்மையுள்ளது என்பதை இங்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Comments:
தமிழ் மொழிக்கு தங்களைப் போன்றவர்களின் சேவை தற்போதைய காலகட்டத்தில் மிகவும் அவசியமானது. தொடர்பு துறை வளர்ந்து வரும் காலகட்டத்தில் ஆங்கிலத்தில் வரும் பல அறிவியல் சார்ந்த வார்த்தைகளுக்கு தமிழில் பொருள் கொள்ளுதல் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு மிக இன்றியமையாதது. தங்களின் பல ஆங்கில கணினி சார் சொற்களுக்கு தமிழில் பொருள் கொள்ளும் திறன் எனக்கு மிக்க வியப்பைத் தருகிறது. சில சொற்கள் புரியவில்லையெனினும்(முதன் முதலாக அறிவதால் இருக்கலாம்) உங்கள் தமிழ் சொல்லாடல் மிக சுவையாக உள்ளது. தமிழ் வலைஞர்கள் பரவலாக இச்சொற்களை பயன்படுத்துவின் நன்று. தங்களின் தமிழ் சேவைக்கு நன்றி. வாழ்த்துக்கள் தொடருங்கள்.
 
தங்களின் கணினி சார் அறிவுரைகளும், தமிழ்ப்பற்றும் தேவையானவையே.
ஆனால் WINDOWS போன்ற பெயர்சொற்களையும் தமிழாக்கத்தான் வேண்டுமா?

அப்புறம், என்னை ஞாபகம் இருக்கிறதா? 'நாலு' தரம் யோசித்துப்பாருங்க!
 
வாருங்கள் தமிழ் செல்வன். என்னால் இயன்றவரை தமிழ் சொற்களைப் பயன் படுத்தி நான் அறிந்த கருத்துக்களை விளக்க முயல்கிறேன். சில வேளை இது சில நண்பர்களுக்கு வெறுப்பையும் தருகிறது.
 
வாங்க ஜுடுவா (நல்ல பெயர் தான்!)

என்ன புரியலன்னு சொன்னா என்னால் முடிந்த வரை விளக்க முயற்சிக்கிறேன். கருத்துக்கும் வருகைக்கும் நன்றி
 
வாங்க நண்பர் இப்னு ஹம்துன்,

வருகை தந்ததற்கு நன்றி. தங்கள் ஆலோசனைக்கும் நன்றி.

'நாலு' சமாசாரத்த இன்னும் மறக்கலியா? (மறந்துடுவீங்கன்னு நெனச்சேன்) விரைவில் இடுகிறேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்.
 
வாருங்கள் வளைகுடாத் தமிழன் அவர்களே, உங்கள் வரவை அங்கீகரிக்கும் பொருட்டே இப்பின்னூட்டம். தங்களின் பின்னூட்டம் இவ்விடுகைக்குப் பொருத்தமில்லாது இருப்பதாக நான் கருதுவதால் அதனை அனுமதிக்க இயலாமைக்கு வருந்துகிறேன். நன்றி.
 
Post a Comment

<< Home

This page is powered by Blogger. Isn't yours?



Free Hit Counter