Tuesday, September 20, 2005

இந்தியாவில் எந்த ஊரில் இருக்கிறீர்கள்?

மின்னஞ்சல் மூலம் வந்த ஒரு நகைச்சுவை

நீங்கள் இந்தியாவில் எந்த ஊரில் இருக்கிறீர்கள் என்பதைக் கண்டறிய ஒரு சிறு வழிகாட்டி. இது நகைச்சுவையேயன்றி எவர் ஊரையும் கிண்டலடிக்கும் நோக்கம் இல்லை.

1. இருவர் சண்டையிட்டுக் கொண்டுள்ளனர். மூன்றாமவர் ஒருவர் வருகிறார். தொடர்ந்து நான்காமவர் வருகிறார். இவ்விருவரும் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் இருவரில் யார் சரி என வாதத்தில் இறங்குகிறார்கள். நீங்கள் இருப்பது கொல்கத்தாவில்.

2. இருவர் சண்டையிட்டுக் கொண்டுள்ளனர். மூன்றாமவர் ஒருவர் வருகிறார். சண்டையிடுவோரைக் கண்டுகொள்ளாமல் தன் வழியே போகிறார். நீங்கள் இருப்பது மும்பையில்.

3. இருவர் சண்டையிட்டுக் கொண்டுள்ளனர். மூன்றாமவர் ஒருவர் வருகிறார். சண்டையிடுவோரை சமாதானப் படுத்த முயல்கிறார். சண்டையிடும் இருவரும் இணைந்து மூன்றாமவரை மொத்தி விடுகிறார்கள். நீங்கள் இருப்பது தில்லியில்.

4. இருவர் சண்டையிட்டுக் கொண்டுள்ளனர். ஒரு கூட்டம் கூடி சண்டையை வேடிக்கை பார்க்கிறது. மூன்றாமவர் ஒருவர் வருகிறார். அருகில் தேநீர்க்கடை ஒன்றைத் திறந்து வியாபாரம் செய்கிறார். நீங்கள் இருப்பது அகமதாபாத்தில்.

5. இருவர் சண்டையிட்டுக் கொண்டுள்ளனர். மூன்றாமவர் ஒருவர் வருகிறார். இவர்களின் சண்டை தீர செயலி (Program) ஒன்றை எழுதுகிறார். செயலியில் குறைபாடு (bug) உள்ளதால் சண்டை நின்ற பாடில்லை. நீங்கள் இருப்பது பெங்களூரில்.

6. இருவர் சண்டையிட்டுக் கொண்டுள்ளனர். ஒரு கூட்டம் கூடி சண்டையை வேடிக்கை பார்க்கிறது. மூன்றாமவர் ஒருவர் வருகிறார். இப்படி சண்டை போடுதல் அண்ணாவுக்கு (அறிஞர் அண்ணாவே தான்) பிடிக்காது என்கிறார். அனைவரும் கலைந்து செல்கின்றனர். நீங்கள் இருப்பது சென்னையில்.

7. இருவர் சண்டையிட்டுக் கொண்டுள்ளனர். இருவரும் சற்றே இளைப்பாறிவிட்டுத் தங்களின் செல்பேசியின் மூலம் தங்களின் ஆட்களைக் கூப்பிடுகிறார்கள். தற்போது 50 பேர் அவ்விடத்தில் சண்டையிடுகிறார்கள். நீங்கள் இருப்பது ஹைதராபாத்தில்.

8. இருவர் சண்டையிட்டுக் கொண்டுள்ளனர். ஒரு கூட்டம் கூடி சண்டையை வேடிக்கை பார்க்கிறது. ஒருவர் காவல் துறைக்குத் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்குகிறார். காவலர்கள் வந்தும் நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே தடியடி நடத்தப் படுகிறது. காவலர்கள் மீது கல்லெறி. பல கடைகள் நாசம். அடுத்த நாள் ஆளுங்கட்சியோ எதிர்க்கட்சியோ முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கிறது. நீங்கள் இருப்பது திருவனந்தபுரத்தில்.

இந்த மடலை எனக்கு அனுப்பியவர் கேரளாவைச் சேர்ந்த ஓர் அன்பர். எனவே தான் திருவனந்தபுரத்தை இவ்வளவு 'பாசமாகக்' குறிப்பிட்டுள்ளார்.

Sunday, September 18, 2005

உங்கள் கைகள் ஓர் ஒளி மூலம்

மனிதக் கைகள் (ஏன் உங்கள் உடலின் பல பகுதிகள்) ஒளி மூலமாகச் செயல்படும் தன்மை வாய்ந்தவை என தற்போதைய ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. இதே ஆய்வு (தாவரங்கள் உட்பட) உயிருள்ள எந்தப் பொருளும் பல்வேறு அளவுகளில் ஒளி உமிழ வல்லது என்றும் தெரிவிக்கிறது. இந்த ஒளியளவானது குறிப்பிட்ட அவ்வுறுப்பின் நலனைப் (well being) பொறுத்து இருப்பதால், கீறா நோயறியும் (Non-invasive) முறையாக இம்முறை பயன் படுத்தப் படவும் வாய்ப்புள்ளது.

ஜப்பானில் உள்ள ஹமாமட்சு ஒளித்துகளியல் (Photonics) நிறுவனத்தில் உள்ள மைய ஆராய்ச்சி ஆய்வகத்தைச் சேர்ந்த மிட்சுவோ ஹிராமட்சு என்ற அறிவியலார் இக்கருத்தைக் கூறுகிறார். கைகள் மட்டுமன்றி, நெற்றிப் பரப்பும் பாதங்களும் ஒளியுமிழ வல்லவை என்று அவர் கூறுகிறார்.

விரல் நகங்கள் 60 ஒளித்துகள்களும், விரல்கள் 40 ஒளித்துகள்களும், உள்ளங்கைகள் 20 ஒளித்துகள்களும் உமிழ்ந்ததாக இவ்வாய்வில் கண்டறிந்தனர். இதனை Journal of Photochemistry and Photobiology B: Biology. இதழில் பிரசுரித்துள்ளதாகவும் ஹிராமட்சு தெரிவித்துள்ளார்.

கைகளில் குளிர்ந்த மற்றும் சூடான தண்ணீர் பாட்டில்கலைப் பிடிக்கச் செய்து இவ்வாறு உமிழப்படும் ஒளியளவு மாறுபடுவதையும் அவர்கள் கண்டார்களாம். கைகளைச் சுற்றி ஆக்சிஜன் அதிகமானாலோ, அல்லது கனிம எண்ணெயைத் தடவிக்கொண்டாலோ, உமிழப் படும்ஒளியளவு மாறுபட்டதாம் (அதிகரித்ததாம்).

மேலும் விரிவான செய்திக்கான சுட்டி : http://dsc.discovery.com/news/briefs/20050905/handlight.html

எல்லாம் சரி, எனக்கு என்ன தோன்றுகிறதென்றால், சிறு வகுப்புகளில் ஒரு பொருள் தனிச்சுழி வெப்ப நிலையை அடையும் வரை மின்காந்த அலைகளை உமிழ்ந்து கொண்டே இருக்கும் என்றும், தெர்மோ கிராஃபி என்னும் மருத்துவ ஆய்வு நம் உடலின் பல பகுதிகள் அகச்சிவப்புக் கதிர்களை வெவ்வேறு அளவுகளில் உமிழும் அடிப்படையில் நோய் கண்டறிய உதவுகிறது என்றும் படித்தது நினைவுக்கு வருகிறது. இந்தத் தத்துவத்தில் இருந்து மேலே சொன்ன செய்தியில் அப்படி என்ன புதிதாகச் சொல்லிவிட்டார்கள் எனப் புரியவில்லை. விபரம் தெரிந்த இயற்பியலாளர்களோ அல்லது மருத்துவர்களோ பின்னூட்டத்தில் விளக்குங்கள். நன்றி.

Monday, September 12, 2005

நீங்கள் உங்கள் அலுவலகத்தில் எரிச்சலூட்டுபவரா?

நீங்கள் உங்கள் அலுவலகத்தில் உங்களுடன் பணி புரிவோரை எரிச்சலூட்டுபவரா? எல்லா அலுவலகத்திலும் இவ்வாறு சிலர் நிச்சயம் இருப்பர் என சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.. ஆனால் அவர்களில் ஒருவராக நீங்களும் இருக்கிறீர்களா? தொடர்ந்து படியுங்கள்..

1. பிறரை பேசத் தூண்டுவதற்காகவே provocative -ஆக உரையாடுகிறீர்கள்
2. அடிக்கடி பிறருக்கு கடினமான கலைச் சொற்களுடன் (buzzwords) வகுப்பு எடுக்கிறீர்கள்
3. பிறரை அவருக்கு நீங்கள் சூட்டிய பட்டப் பெயரை வைத்தே பாராட்டுகிறீர்கள்.
4. உங்கள் அறை, மேசையில் உங்கள் குழந்தைகளின் படங்கள் அல்லது அவர்கள் வரைந்த படங்களால் அலங்கரித்துள்ளீர்கள்
5. பிரபலமானோருடன் நீங்கள் எடுத்துக்கொண்ட நிழற்படங்களை உங்கள் அலுவலகத்தில் எல்லோரும் பார்க்கும்படி வைத்துள்ளீர்கள்
6. உங்கள் குரல்-மடலில் (Voicemail) நீண்ட நேரம் கவிதை போலப் படித்து செய்தி விடச் சொல்கிறீர்கள்.
7. பணி நிமித்தமான சந்திப்புகளில் (business meetings) நீங்கள் ஒவ்வொரு கேள்வி கேட்பதற்கு முன்னால் உங்களின் சாதனைகளைப் பட்டியலிட்டுப் பின் கேள்வி கேட்கிறீர்கள்
8. மிகுந்த மணம் கொண்ட மதிய உணவு உண்கிறீர்கள் (நல்ல மணம் தான்!)
9. நீங்கள் சமைத்துத் தோற்றுப்போன நால்களுக்கு அடுத்த நாள் உங்களுடன் பணி புரியும் சக ஊழியர்களுக்கு அவ்வுணவை சிறு விருந்தாக (treat) அளிக்கிறீர்கள்
10.நீங்கள் வருவதைக் கண்டாலேயே சக ஊழியர்கள் ஓடி மறைகிறார்கள். (பயமோ அல்லது மரியாதை(??)யோ)
11.நீங்கள் பேசினால் மற்றவர்கள் நீங்கள் பேசி முடிக்கும் முன்னரே உங்கள் கருத்துகளுக்கு ஒத்துப் போகிறார்கள்.
12.நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது உங்கள் அலுவலகத்தில் உள்ள அனைவருக்குமே தெரியும்படி மின்னஞ்சல் அனுப்புகிறீர்கள். (I'm just a call away / If anyone needs me I'll be in bathroom / etc)
13. எப்போதும் மெல்லும் பசை(chewing gum)மென்று கொண்டே இருக்கிறீர்கள்.
14. மூக்கைத் துளைக்கும் நறுமணம் பூசி வலம் வருகிறீர்கள்.
15.உங்கள் சொந்தப் பிரச்சனைகளால் உங்களின் சக ஊழியர்களும் மனதளவில் பாதிக்கப் பட்டுள்ளதாகவும் உங்களின் மேல் பரிதாபப் படுவதாகவும் நீங்கள் திண்ணமாக நம்புகிறீர்கள்.
16.இருவர் பேசிக் கொண்டிருக்கும் போது தேவையே இல்லாமல் மூக்கை நுழைத்து தலைப்பை உங்களை அறியாமலேயே மாற்றி விடுகிறீர்கள்
17.உங்களுக்கு மூட் (mood) சரியில்லை என்றால் அது அனைவருக்கும் தெரியவேண்டும் என நம்புகிறீர்கள்
18.உங்களின் சக ஊழியர் அல்லது உங்களுக்குக் கீழ் பணிபுரியும் ஊழியர்கள் வீட்டிற்குக் கிளம்ப ஆயத்தமாகும்போதே புதிய பணியொன்றை அளிக்கிறீர்கள்.
19.பிற ஊழியரிடம் கடனாகப் பெற்ற காகிதக் கத்திரி, ஸ்டேப்ளர் இன்ன பிறவற்றைத் திரும்பத் தர அடிக்கடி மறக்கிறீர்கள்
20. பிறாரிடம் உங்கள் உரையாடல் அடிக்கடி "You are so annoying" என்று முடிகிறது.

மேற்கண்டவற்றில் ஒன்று அல்லது இரண்டு உங்களுக்குப் பொருந்தினால், விரைவில் அவற்றிலிருந்து விடுபட்டு பிற ஊழியர் விரும்புபவராக நீங்கள் மாற வாய்ப்புள்ளது

3-5 பிற ஊழியர் உங்களைப் பற்றிச் சொல்வதை கவனியுங்கள். இல்லையெனின் நீங்கள் எரிச்சல்பேர்வழி என முத்திரை குத்தப் படலாம்.

6 அல்லது அதற்கு மேல் எனின் நீங்கள் ஏற்கனவே எரிச்சல்வாதி என முத்திரை குத்தப் பட்டு இருக்கலாம்.

என்றாலும், மிகவும் குழைவாகவோ அல்லது மிகவும் கடினமாகவோ நடந்தாலும் உங்களின் சக ஊழியர்கள் எரிச்சல் அடையக் கூடும்.

அவ்வப்போது எரிச்சல் படுத்துவதும் தவறில்லை என்று சில மனித வள மேம்பாட்டு வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

மூலம்: http://careerbuilder.com

This page is powered by Blogger. Isn't yours?



Free Hit Counter