Wednesday, May 03, 2006

நன்னான்கு அல்லது நவ்வாலு!

நண்பர் கவிஞர் இப்னு ஹம்துன் அப்படி என்ன என்னுடைய இவ்வலைப்பதிவில் கண்டாரோ தெரியவில்லை, சும்மா இருந்த என்னை 'நாலு' விளையாட்டிற்கு அழைத்து இழுத்து விட்டு விட்டார்.

சரி சொல்லுவதற்கு (உருப்படியாய்) நான்கு செய்திகள் இல்லை என்றாலும் எனக்குப் பிடித்த நான்கு வானூர்தித் தளங்களைக் குறிப்பிடலாம் என உள்ளேன்.

1. காய் டெக் (Kai Tek), ஹாங்காங்:

மிகவும் சிக்கலான தரையிறங்கும் முறை கொண்ட தற்போது மூடப்பட்டுவிட்ட ஒரு விமானத்தளம். விமானி வானூர்தியைத் தரையிறங்க இறுதித் தரைதொடலுக்கு (Final approach) ஆயத்தமாக 30 வினாடிகளே அவகாசம் உள்ளதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். இன்றும் விமானிகளின் CPL உரிமப் புதுப்பிப்புத் தேர்வில் காய் டெக் மாதிரி (Simulation) இடம்பெறுகிறது என்றும் கேள்விப்பட்டுள்ளேன். இது தற்போது மூடப்பட்டு விட்டதால், புதிய விமானத்தளம் தற்போது செக் லப் காக் (Chek Lap Kok) எனும் இடத்தில் இயங்கி வருகிறது. கத்தாய் பசிபிக் வானூர்திச்சேவை நிறுவனத்தின் தாயகத் தளமாகவும் இது உள்ளது.









2. சாங்கி (Changi), சிங்கப்பூர்

சிங்கப்பூர் சென்று வந்தவர்கள் அல்லது சிங்கப்பூரில் பணி புரிபவர்கள் சாங்கி வானூர்தித்தளம் குறித்து ஒருமுறையேனும் வியக்காமல் இருக்க இயலாது. முனையங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு இங்கு உபயோகப் படுத்தப்படும் ஸ்கைட்ரைன் முதலில் இங்கு தான் பார்த்தேன். சிங்கப்பூர் வானூர்திச்சேவை நிறுவனத்தின் தாயகத் தளம் இது.











3. ஷிபோல் (Schiphol), ஆம்ஸ்டர்டாம்

ஐரோப்பாவிலிருக்கும் மிகப்பெரிய வானூர்தித்தளங்களுள் ஒன்று. ஷிபோல் என்பது ஒரு தனி சிறு நகரமாக உருவெடுத்துள்ளது. கிட்டத்தட்ட ஏழு ஓடுபாதைகளைக் (இன்னும் மூன்று கட்டிக் கொண்டிருப்பதாகக் கேள்வி!) கொண்டுள்ளது. வான்குழு (Skyteam) எனப்படும் வானூர்திச்சேவை ஒத்துழைப்புக் குழுமத்தின் முக்கிய உறுப்பினரான கேஎல்எம் (KLM) வானூர்திச்சேவை நிறுவனத்தின் தாயகத் தளம் இது. ஆம்ஸ்டர்டாம் நகரத்துடன் மிக வசதியான சாலை மற்றும் இருப்புப்பாதை இணைப்பு கொண்டுள்ளது. நகரத்திற்கு செல்ல வானூர்தித் தளத்தின் சுரங்கப் பாதைக்குச் சென்று நெதர்லாந்து ரயில் போக்குவரத்து நிறுவனத்தின் தொடர்வண்டிகள் மூலம் 15 நிமிடங்களுக்குள் நகர மையத்தை அடையலாம்.











4. துபை (Dubai), துபை.

அரபு அமீரக ஒன்றியத்திலிருக்கும் இவ்வான்தளத்தை அறியாதவர் மிகச் சிலரே. துபை ஒரு மிக முக்கிய சுற்றுலா நகரமாக மாறி வருகிறது.

இந்நகரில் ஆண்டு முழுவதும் ஏதாவது ஒரு விழா நடந்து கொண்டுதான் இருக்கிறது. எமிரேட்ஸ் எனப்படும் துபைக்குச் சொந்தமான வானூர்திச் சேவை நிறுவனத்தின் தாயகத் தளம் இது. தற்போது உலகக் கால்பந்துக் கோப்பைக்கான அதிகாரப்பூர்வ வானூர்திச் சேவை எனும் படிநிலை (Status) கிடைத்துள்ளதால், துபை மேலும் அதிக வானூர்திச் சேவைகளைக் காணும்.

முதலில் தமிழ்நாட்டிலிருக்கும், சென்னை, கோவை, மதுரை, திருச்சி வானூர்தித்தளங்களைப் பற்றித் தான் எழுதத் தொடங்கினேன். இருப்பினும் அவற்றைப் பற்றி நம்மில் பலருக்குத் தெரிந்திருப்பதால் இப்படி வேறு கோணத்தில் நான்கு வானூர்தித் தளங்களைத் தேர்ந்தெடுத்து எழுதியுள்ளேன். தூத்துக்குடியில் கூட ஒன்று இருப்பதாக அறிகிறேன்.

This page is powered by Blogger. Isn't yours?



Free Hit Counter